கெடா எஃப்ஏ விசாரணையில் என்னைத்தான் குறிவைத்துள்ளனர்
கோலாலம்பூர், ஜன. 9 –
கெடா கால்பந்துச் சங்கம் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மீதான மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணையில், தம்மைத்தான் உண்மையான இலக்காக குறிவைத்துள்ளனர் என்று, மாநில மந்திரி பெசார் சனுசி நோர் கூறியுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 60 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் மீதான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள், வெறும் “சின்ன மீன்கள்தான்” என்று கூறிய அவர் காரணம், இதில் தம்மை தொடர்புப்படுத்தவே “அவர்கள்” விரும்புகின்றனர் என்றார்.எனினும், “அவர்கள்” என்று தாம் குறிப்பிட்டுள்ளவர்கள் யார் என்பதை சனுசி தெளிவுபடுத்தவில்லை.
“பல மாதங்களாக எனக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுப்பதற்கான ஒரு வழியை அவர்கள் சோர்வின்றி தேடிவந்தனர். ஆனால், இன்னமும் அவர்களினால் அந்த வழியைக் கண்டறிய முடியவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமா அல்லது ஒருவரை வெறுமனே குற்றஞ்சாட்ட நீங்கள் விரும்புகின்றீர்களா?
“உண்மையை நீங்கள் கண்டு பிடித்துள்ளீர்கள்: அதாவது, சனுசிக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லை என்பதை” என்று கெடா, அலோர்ஸ்டாரில் உள்ள விஸ்மா டாருல் அமான் சதுக்கத்தில் நேற்று நடந்த மாநில பொதுச் சேவை ஊழியர்கள் கூட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சனுசி தெரிவித்தார்.
கெடாவில் அதிகளவில் லஞ்ச ஊழல் நிகழ்கிறது என்றும் அதில் மாநில காற்பந்துச் சங்கமும் சம்பந்தப்பட்டுள்ளது என்ற ஒரு எண்ணத்தை வெறுமனே உருவாக்கவே இந்த வழக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சனுசி கூறினார்.எனினும், இதன் தொடர்பிலான விசாரணைக்கு உதவுவதற்காக தாம் அழைக்கப்பட்டால், எம்ஏசிசியுடன் ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக, கெடா கால்பந்து சங்கத் தலைவருமான சனுசி கூறினார்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 60 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தொடர்பான ஒரு விசாரணைக்காக, கெடா கால்பந்து சங்கத் தலைமை நிர்வாக அதிகாரி சுல்கீப்ளி சே ஹரூண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதை அச்சங்கத்தின் உதவித் தலைவர் ரட்சி மாட் டின் கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தி இருந்தார்.
இதனிடையே, இந்த விசாரணைக்குப் பின்னால் இருக்கும் “உண்மையான சதித் திட்டத்தை” தாம் அம்பலப்படுத்தப் போவதாகக் கூறிய சனுசி, அரசியல் நோக்கங்களுக்காக எம்ஏசிசி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.