அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை
கோலாலம்பூர், ஜன. 10-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றம் காணுவதாக வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன.இத்தகைய வதந்திகளும் புரளிகளும் தொடர்ந்து வருவதால், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் மட்டுமே அதில் குளிர்காய்ந்து வருவதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்திற்கு நகர்வு என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே தங்கள் கையாலாகாத்தனத்தை செய்து வருகின்றனர்.பெட்டாலிங் ஜெயாவில் ஷெரட்டன் நகர்வு தொடங்கி இன்று துபாய் நகர்வு வரை முட்டிமோதி தங்கள் அரசியல் லாபத்தை அடைய ஆட்சியைக் கவிழ்க்கும் பணியில் மும்முரமாக செயல்படுகின்றனர்.
அரசியல் வரலாற்றில் டத்தோஸ்ரீ அன்வாரின் நகர்வை தாங்கிக்கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத சில அரசியல் தலைவர்களின் செயல்கள் மறைமுகமாகவோ அல்லது நேர்மறையாகவோ வந்து கொண்டேதான் இருக்கின்றன.
பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அன்வாரின் அரசியல் நகர்வை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரோடும் கொள்கையோடும் அவர் ஆட்சி நடத்தி வருவதால், அரசியல் எதிரிகளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எப்படியாயினும் அன்வாரை வீழ்த்துவதற்கு விடிய விடியக் கதைபேசிக் காலத்தை விரயம்தான் செய்கின்றனர் இந்த அரசியல் எதிரிகள்.அன்வாரை பொறுத்தவரை இந்த ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி தமக்குக் கவலையில்லை என்றும் தமக்கு நிறைய பணிகள் இருப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார். பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்துள்ள பாஸ் கட்சி இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மும்முரம் காட்டி வருகின்றது. எதற்காக பாஸ் கட்சி இந்த மும்முரத்தைக் கையில் எடுக்கின்றது என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.
மற்றொரு கூட்டணியில் தொற்றிக்கொண்டு சுலபமாக ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்று பாஸ் கட்சி தீவிர யோசனையில் இருந்தாலும், அதற்கெல்லாம் இடம்கொடுக்க ‘மேலிடம்‘ தயாராக இல்லை.யார் அந்த மேலிடம் என்பதை அனைவரும் அறிவர். அதனால்தான் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க அந்த மேலிடம் முழுமையாக ஒப்புக்கொண்டது.அடுத்த மாதம் புதிய மேலிடம் வருவதற்குள் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற பாஸ், பெரிக்காத்தான் கூட்டணி கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கிறது.
இருப்பினும் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல், மேலும் தீவிரமடைய வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் விருப்பமாகும்.இந்த ஆட்சி நகர்வு செய்கின்றவர்களுக்கு ஒரு பாடத்தை அன்வார் கற்றுத்தர வேண்டும். வெறுமனே இருந்துவிடாமல் செயலில் அன்வார் தீவிரம் காட்ட வேண்டும். இனியும் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றம் என்று ஒவ்வொரு முறையும் பிரதமர்களை மாற்றிக்கொண்டிருக்கத் தயாராக இல்லை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை டத்தோஸ்ரீ அன்வார் வைக்க வேண்டும்.
மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் மூன்று பிரதமர்களைச் சந்தித்த சோகம் இனியும் ஏற்படக்கூடாது. இனியும் அன்வார் பொறுமையைக் கடைப்பிடிப்பது நாட்டுக்கும் நல்லதல்ல, நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.
நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பிரதமரின் கையில்தான் இருக்கிறது. அதை அன்வார் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நாட்டு மக்களுக்கு அன்வார் வழங்கும் உண்மையான மக்களாட்சித் தத்துவமாகும்.இதை அன்வார் செய்வாரேயானால், எந்த நகர்வும் இனி நகராது. அரசியல் எதிரிகள் வீழ்வது நிச்சயம். இவ்வாறு ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.