சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு
கோலாலம்பூர், ஜன. 10-
நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீஅஸாலினா ஒஸ்மான் நேற்று தெரிவித்தார். பாலியல் குற்றங்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2023ஆம் ஆண்டுவரை 6,900 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.ஆயினும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,570 குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பல சம்பவங்கள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது என்று முகநூல் பதிவில் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.
கல்வியமைச்சுடன் சேர்ந்த சட்ட விவகாரப் பிரிவு நேற்று கூட்டமொன்றை நடத்தியது. அதில் அமைச்சர் அஸாலினா, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் ஆகியோரும் அவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம், மலேசிய மனித உரிமைகள் ஆணையம், சமூக நலச்சேவைத்துறை, போலீஸ்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டனர். சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புகார் செய்யப்படாமல் போகும் விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்தாண்டில் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுள் அதிகமானோர் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். அவற்றுள் 110 சம்பவங்கள் ஆறு வயதுக்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்டவை ஆகும்.