மித்ராவின் மூலம் இந்திய சமுதாயத்தில் உருமாற்றம் ஏற்படும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவோம்

இஷாந்தினி தமிழரசன்
லாவண்யா ரவிச்சந்திரன்

புத்ராஜெயா, மார்ச் 22-
இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மக்களை பொருளாதார துறையில் ஈடுபடுத்துதல் சிறந்ததாகும். இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மாற்றுவதற்கான புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் கண்டு புதுமையான தீர்வுகளைப் பற்றி விவாதிப்பதே மித்ராவின் இந்த மூன்று நாள் பட்டறையாகும்.
பி40 மக்களின் சமூக பொருளாதார அடிப்படையில் மலேசிய இந்திய சமூகத்தைச் செழுமைப்படுத்துவதற்காக நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் ஒருங்கிணைப்பாகும் இது என்று ஒற்றுமை துறையின் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.


2017ஆம் ஆண்டு மலேசிய இந்தியர் ப்ளூ பிரிண்ட், இந்திய சமூக செயல்திட்டம் 2021ஆம் ஆண்டின் பற்றிய விரிவான ஆய்வினை மித்ரா மேற்கொண்டுள்ளது.
இருப்பினும்,மித்ராவின் முந்தைய பணியின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க பிதிஎம்ஐ முழுமையாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை.
அதன்படி இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான முன்னணி நிறுவனமாக இந்த பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு இடைவெளியை மூடவும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கவும் முடியும் என நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார்.


இதனால் மித்ராவின் தொலைநோக்கு பார்வையும் பணிக்கு ஏற்ப எதிர்கால முயற்சிகளும் திட்டங்களும் அமையும் என நம்பப்படுகிறது. 2030ஆம் ஆண்டு அனைத்து தரப்பினரின் பங்கேற்பு மலேசிய இந்திய சமூகத்தின் சமூக பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த பயிலரங்கத்தின் மூலம் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள், சவால்களைத் தீர்க்க பலர் முன்மொழிந்த திட்டங்கள் தீர்மானமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் மூன்று முக்கிய முன்மொழிவுகள் ஏற்புடையதாக அமைய, முதலாவதாகத் தொழில் முனைவு மற்றும் தொழில் வளர்ச்சி, அடுத்ததாக சமூக நலம் மற்றும் சமூக மேம்பாடு மூன்றாவதாக மனித மூலதன வளர்ச்சி ஆகும்.


மக்களுக்கு செயல்திறன் மிக்க நடவடிக்கைகள்,கூட்டாண்மை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் திறமையான வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
அதே வேளையில் வேலையின்மை விழுக்காட்டை குறைக்கவும் முடியும் என அறியப்பட்டுள்ளது. அதோடு, வறுமையை குறைத்தல், சமூக பொருளாதார பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் தேசிய சமத்துவம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.


இதனை அடுத்து, சிறந்த கல்வியை வழங்கி பட்டப்படிப்பு மாணவர்களை அதிகரிப்பதோடு மலேசிய இந்திய இளைஞர்களிடையே அதிக வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும் மித்ராவின் சில கருத்துக்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
மித்ராவின் செயல் திட்டங்களில் வீட்டு வருமானத்தை அதிகரிப்பது, நிலையற்ற மக்களின் சவால்களை நிவர்த்தி செய்வது, மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களுக்குத் தக்க நேரத்தில் உதவிகளை அணுகுவதும் மித்ரா நோக்கமாக் கொண்டுள்ளது.
பொதுவாகப் பொருளாதாரச் சூழலில் வசதி குறைந்த மக்களையும் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும்,இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாகச் செயல்படும் இந்தப் பயிலரங்கு முழுவதும் இந்திய மாணவர்களுக்குத் தரமான கல்விக்கான அணுகுமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.


அதுமட்டுமில்லாமல், பல்கலைக்கழகங்களில் இணைந்து மாணவர்களுக்கான சிறந்த கல்வியை வழங்குவதில் கல்வி நிறுவனங்களும் பல தரப்பினர்களின் ஒத்துழைப்பும் அவ்வப்போது வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதோடு, இந்த பட்டறையின் மூலம் பெமாண்டு தொகுத்து கொடுக்கும் கருத்துரைகள்,அடுத்த பதிவிலும் பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதோடு மே 2020இல் மித்ரா முயற்சிகளைச் செயல்படுத்துவதாக அமைச்சு முடிவெடுத்துள்ளது. வளமான இந்திய சமுதாயத்தை உருவாக்க கைகோர்த்து ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கேட்டுக் கொண்டார்.


இந்த இரண்டு நாள் பயிலரங்கில் கலந்து கொண்டு பேசப்பட்ட கலந்துரையாடல்களும் கருத்துகளும் இன்றோடு நின்று விடாமல் செயல்முறையிலும் காட்டப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதோடு அதற்கான அனைத்து வேலைப்பாடுகளும் நடக்கும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங், ஒற்றுமைத்துறையின் பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமது யூசோப், தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், நிறுவன பிரதிநிதிகள், அரசு, அரசு சாரா இயக்கங்கள், சமய இயக்கங்கள்,இளைஞர் இயக்கங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.